ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை நடத்த கோரிக்கை

0
108

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா தொற்றை துரிதமாக கண்டறிய சீன நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்யப்பட்டதில் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

தமிழக அரசு சார்பாக சுமார் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், மத்திய அரசு தலையிட்டு மாநில அரசுகள் நேரடியாக மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்யக்கூடாது எனவும் மத்திய அரசு மேற்கொள்ளும் கொள்முதலில் இருந்து தான் மாநிலங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் பிரித்துக் கொடுக்கப்படும் என தெரிவித்தது.

இந்நிலையில் சீன நிறுவனத்திடமிருந்து போக்குவரத்து அடக்கம் உட்பட ரூ.225க்கு வாங்க ஒப்பந்தம் செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர்., ரேர் மெட்டாபாலிக் லைஃப் சயின்ஸ் மற்றும் மேட்ரிக்ஸ் லேப்ஸ் என்ற இரண்டு இடைத்தரகர் நிறுவனங்களின் வாயிலாக ரூ.600க்கு கொள்முதல் செய்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற விசாரணையின் போது இந்த உண்மை வெளியாகியுள்ளது.

அதேப்போல் ஐ.சி.எம்.ஆர். அங்கீகரிக்காத சான் பயோடெக் என்ற இடைத்தரகர் நிறுவனத்தின் மூலம் விதிகளை மீறி தமிழகத்திற்கு மேட்ரிக் லேப் நிறுவனத்திடமிருந்து ஜி.எஸ்.டி. சேர்த்து ரூ.675 விலைக்கு 50,000 டெஸ்ட் கிட்களை வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளதும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

அதேநேரத்தில் சீன நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் அனைத்தும் தரமற்றவையாக உள்ளன.

இதன் மூலம் மிகப்பெரும் அளவில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்ற குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லாமல் இல்லை.

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்கிற ரீதியில், நாடே ஒரு பேரிடரில் சிக்கித் தவித்து வரும் சூழலில், நேரடியாக கொள்முதல் செய்யாமல் இடைத்தரகர்களை நியமித்து, தரமற்ற கருவிகளை பெற்று கொள்ளை லாபத்துடன் முறைகேட்டில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது. இது மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை.

முன்னதாக ரேபிட் டெஸ்ட் கிட்களை கொள்முதல் செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அதுபோன்ற குழு அமைக்கப்படாமல் இடைத்தரகர் மூலமாகத்தான் கொள்ளை கொள்முதல் நடைபெற்றுள்ளது என்பது டெல்லி உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின் மூலம் தெரியவருகிறது.

சட்டீஸ்கர் மாநிலம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.337க்கு வாங்கியதாக வெளிப்படையாக தெரிவித்த நிலையில், தமிழக அரசு தான் கொள்முதல் செய்த விலையை வெளிப்படையாக தெரிவிக்காமல் மத்திய அரசு நிர்ணயித்த விலையில் வாங்கினோம் என்று தொடர்ந்து மழுப்பலான பதிலையே தெரிவித்தது. தமிழக அரசின் வெளிப்படைத் தன்மையற்ற இத்தகைய பதில் மூலம் மிகப்பெரும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என தற்போது தெரியவந்துள்ளது.

ஆகவே இதுகுறித்து உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை செய்யப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உண்மைத் தன்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here