மின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம்! மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

0
98

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி கிடப்பதாலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதனால் வழக்கத்திற்கு மாறாக மின் பயன்பாட்டு அளவு அதிகரித்து மின் கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பிப்ரவரி-மார்ச் மாத ரீடிங் எடுக்காத மின் இணைப்புகளுக்கு முந்தைய மாத கட்டணத்தை செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தியது. அடுத்த இரண்டு மாத கணக்கீட்டின் போது கூடுதல் குறைவு கட்டணம் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால் அடுத்த ஏப்ரல்-மே மாத மின் கட்டணம் இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். காரணம் தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருப்பதால் மின் சாதனங்கள் பயன்பாடு அதிகமாக இருக்கும் சூழலில், ஏற்கனவே முந்தைய மாத கட்டணத்தை மட்டும் செலுத்தி ரீடிங் செய்யப்படாமல் இருக்கும் பிப்ரவரி-மார்ச் மாத மின் பயன்பாட்டு அளவையும் சேர்த்து ஏப்ரல்-மே மாத ரீடிங்கி்ல் மின்சார பயன்பாடு கணக்கீட்டு அளவு அதிகரிக்கும். இதனால் மின் பயன்பாட்டளவின்படி வழக்கமான கட்டணத்தைவிட மிக அதிகளவு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். உதாரணமாக இரண்டு மாதத்திற்கு ரீடிங் அளவு 500 யூனிட் என்ற சீரான அளவிற்குள் மின் பயன்பாடு உள்ள வீட்டிற்கு, 4 மாத அளவாக வரும்போது அது ரீடிங்கில் 1000 யூனிட்டாக பதிவாகும். அவ்வாறு பதிவாகும்போது அதிகளவு மின் நுகர்வு (consuming) அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரும்.

ஏற்கனவே வருமானமின்றி தவித்து வரும் மக்களுக்கு கூடுதல் சுமையை இது உருவாக்கும். மின் கட்டணத்தை ரீடிங் முறைப்படி செலுத்தியிருந்தால், அடுத்த ரீடிங்கின் போது மக்களுக்கு மிகப்பெரும் அளவில் சிரமம் ஏற்படுவதை தவிர்த்திருக்க முடியும்.

ஆகவே, அடுத்த இரண்டுமாத மின் கணக்கீட்டின் போது மின் நுகர்வு (consuming) அளவின்படி கட்டணத்தை நிர்ணயிக்காமல், யூனிட் ( Per Unit) அடிப்படையில் மட்டுமே மின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, குறைந்தபட்சம் 50% கட்டண சலுகையை நுகர்வோருக்கு வழங்க தமிழக அரசு முன்வர வண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேப்போல் வணிக நிறுவனங்களும் முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்துமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது. வீடுகளை விடவும் வணிக நிறுவனங்களுக்கு மின் பயன்பாடு அதிகமாக இருக்கும் நிலையில், கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 15ம் தேதி முதலே பெரும்பாலான வணிக நிறுவனங்கள் செயல்படாத நிலையில், வணிக நிறுவனங்கள் முந்தைய மாத கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்பது ஏற்புடையதாக இருக்காது. ஆகவே அதற்கு மாற்று ஏற்பாட்டை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here