தமிழக முதல்வர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சென்னையில் தங்கும் இல்லம் அமைக்கப்படும் என்றும், உலமாக்களின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது

0
119

தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் இஸ்லாமியர்களின் ஜஹ் பயணத்திற்காக சென்னையில் தங்கும் இல்லம், உலமாக்களின் ஓய்வூதியம், வாகனம் வாங்க மானியம் ஆகியவை சம்பந்தமாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது இஸ்லாமியர்கள் நலன் சார்ந்த அறிவிப்பாகும்.

குறிப்பாக தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் தமிழக மக்கள் நலன் காக்கும் பல்வேறு அறிவிப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் சிறுபான்மை இன மக்களான இஸ்லாமியர்களுக்காக தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இஸ்லாமியர்களுக்கு பெரும் பயன் தரும். அதாவது ஜஹ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சென்னையில் ரூபாய். 15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும் என்றும், உலமாக்களின் ஓய்வூதியம் ரூபாய். 1,500 லிருந்து ரூபாய் 3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் இன்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்த அறிவிப்புக்களால் இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு நல்ல திட்டங்களை கொடுத்திருக்கிறது என்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பாதுகாப்பாக துணை நிற்கும் அரசு என்பதையும் நிரூபித்துள்ளது. எனவே தமிழக அ.தி.மு.க அரசு இஸ்லாமிய மக்களுக்காக அறிவித்துள்ள அறிவிப்புக்களை த.மா.கா சார்பில் வரவேற்று, பாராட்டி, நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக அரசின் இஸ்லாமியர்கள் நலன் சார்ந்த திட்டங்களும், பணிகளும் மென்மேலும் தொடர, வளர, சிறக்க த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here