தமிழக அரசு சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டியிருப்பது பெரும் வரவேற்புக்குரியது, பாராட்டத்தக்கது- ஜி கே வாசன்

0
116

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டியிருப்பது பாராட்டுக்குரியது. அதாவது சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வி.கூட்ரோட்டில் ஆசிய அளவில் அமைய உள்ள கால்நடை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவானது விவசாயிகள் சார்ந்த பெருவிழாவாக அமைகிறது. குறிப்பாக கால்நடை விவசாயிகள் பெரும் பயன் பெறவும், பால்வளத்துறை முன்னேற்றம் அடையவும், கால்நடை மருத்துவப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பயன் பெறவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். இதனால் விவசாயப் பெருங்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவதோடு அவர்களின் தொழில் சிறக்கவும் வழி வகுக்கும். தமிழகத்தில் கால்நடை விவசாயிகளும், பால்வளத்துறையும், வேளாண்மைத்துறையும் வளம் பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகள் விவசாயிகள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலன் காக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
மேலும் தமிழக அரசு தமிழக மக்களின் குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கையான தோட்டக்கலை பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்பதையும் நிறைவேற்ற முன்வர வேண்டும். காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்கள் மூலமும் அதிக வருவாயை ஈட்ட முடியும். தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி 13.89 இலட்சம் ஹெக்டேரில் அதாவது சுமார் 35 இலட்சம் ஏக்கரில் 182.03 இலட்சம் டன் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியாகிறது. இந்த உற்பத்தி அளவு தேசிய சராசரி அளவை விட கூடுதல் என்பதில் தமிழகம் பெருமை அடைகிறது. தோட்டக்கலை பயிர்கள் மேலும் தமிழகத்தில் அதிகரிக்க வழி வகை செய்யும் வகையில் தோட்டக்கலை பயிர்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேலும் அதிகரிக்க வேண்டும். திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம் NRCB உட்பட மத்திய ஆராய்ச்சி நிலையங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே 2005 ஆம் ஆண்டில் பெரியகுளத்திலும், 2011 ஆம் ஆண்டில் சேலத்திலும் தோட்டக்கலை பல்கலைக்கழகம் துவங்கப்படும் என்று அரசு அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே தமிழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பெரியகுளம், ஊட்டி, சேலம் உள்ளிட்ட பகுதியில் ஏதேனும் ஒரு இடத்திலாவது தோட்டக்கலை பல்கலைக்கழகத்தை அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே இன்று சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியிருக்கும் தமிழக அரசுக்கு த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, மாநிலத்தில் புதிதாக ஒரு தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here