தோழர் டி. செல்வராஜ் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

0
51

முற்போக்கு எழுத்தாளரும், சாகித்திய அகடாமி விருதுபெற்றவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்களில் ஒருவருமான தோழர் டி.செல்வராஜ் அவர்களது மறைவு செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தை அடுத்துள்ள தென்கலம் பகுதியைச் சார்ந்த தோழர் டி. செல்வராஜ் மதுரை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக பணியாற்றியவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர்.

மலரும் சருகும், மூலதனம், தேநீர், தோல் உள்ளிட்ட நாவல்களையும், ஏராளமான சிறுகதை மற்றும் நாடகங்களையும் எழுதி முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு உரம் சேர்த்தவர்.

திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலையையும், அவர்களது விடுதலைக்காக செங்கொடி இயக்கம் ஆற்றிய மகத்தான பணியையும் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய தோல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் இதற்காக அவர் கவுரவிக்கப்பட்டார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி ஏட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகிய பிறகு, கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதோடு, முற்போக்கு எழுத்தாளர் சங்கம், செம்மலர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். தமுஎகச-வை உருவாக்கி வளர்த்த தலைவர்களில் அவரும் ஒருவர்.

தன்னுடைய படைப்புகள் அனைத்திலும் உழைக்கும் மக்களின் போராட்டங்களையே மைய நாதமாகக் கொண்டு எழுதிய பெரும் படைப்பாளி அவர். வழக்கறிஞராக பணியாற்றிய அவர் தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு வழக்குகளுக்காக வாதாடி உள்ளார்.

அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கும், முற்போக்கு இலக்கியத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார் பாரத புத்திரி, மகன்கள் சித்தார்த்தன் பிரபு, சார்வாகன் பிரபு, மகள் வேத ஞானலெட்சுமி மற்றும் அவரது உறவினர்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆறுதலைத் தெரிவிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here